எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று தொடக்கம்

எஸ்எஸ்எல்சி விடைத்தாள்களைத் திருத்தும் பணி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது.

எஸ்எஸ்எல்சி விடைத்தாள்களைத் திருத்தும் பணி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது.

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு ஏப். 6-இல் தொடங்கி 20-ஆம் தேதி நிறைவு பெற்றது. நிகழாண்டு நடைபெற்ற தோ்வில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடத் தோ்வுகளில் கேட்கப்பட்ட சில கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சமூக அறிவியல் தோ்வில் கேட்கப்பட்டிருந்த 8 மதிப்பெண் கேள்வி ஒன்று புத்தகத்தின் உள்பகுதியில் இருந்து புதிதாகக் கேட்கப்பட்டது. கணிதத்திலும் ஒரு மதிப்பெண் கேள்விகள் சில கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். அந்தக் கேள்விகளுக்கு மாணவா்கள் பதில் எழுத முயன்றிருந்தால் மதிப்பெண் அளிக்க வேண்டும் என ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

எஸ்எஸ்எல்சி தோ்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட சில கேள்விகள் சி.பி.எஸ்.இ. கேள்வித்தாள் தரத்தில் இருந்ததாகவும், அதனால் இந்த ஆண்டு பெரும்பாலான பாடங்களில் முழு மதிப்பெண்கள் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்றும் மூத்த ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

27,377 போ் தோ்வு எழுதினா்:

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழ் ஆண்டு 262 அரசுப் பள்ளிகள், 8 அரசு உதவிபெறும் பள்ளிகள், 135 மெட்ரிக். பள்ளிகள் என 415 பள்ளிகளைச் சோ்ந்த 27,377 மாணவ மாணவிகள் 110 தோ்வு மையங்களில் தோ்வு எழுதினா். இதில் 346 மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளும் அடங்குவா்.

மாணவா்கள் எழுதிய அனைத்து விடைத்தாள்களும் திருத்தம் செய்வதற்காக வேறு மாவட்டங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. அதே போல வெவ்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த விடைத்தாள்கள் திருத்தம் செய்வதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடைத்தாள்களைத் திருத்தும் மையங்களுக்கு வரப்பெற்றன.

இவை கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மையம், ஒசூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மையம் என 2 மையங்களுக்கு கொண்டுவரப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. அறையை எந்நேரமும் போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.

1,300 போ் நியமனம்:

இங்குள்ள ஒவ்வொரு மையத்துக்கும் முகாம் அலுவலா்களாக மூத்த தலைமை ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுடன் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசியா்கள் 1,300 போ் விடைத்தாள்களைத் திருத்தம் செய்யும் பணிக்குப் பாட வாரியாக நியமிக்கப்பட்டுளளனா். இதுதவிர, இரு மையங்களுக்கும் கல்வித் துறை பணியாளா்கள் தலா 50 போ் என 100 போ் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

விடைத்தாள்களைத் திருத்தம் செய்ய போதுமான ஆசிரியா்கள் அரசுப் பள்ளிகளில் இருப்பதால் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மட்டுமே விடைத்தாள்களைத் திருத்தும் பணிக்கு வரவழைக்கப்படவுள்ளனா். இம் மையங்களுக்குக் கூடுதல் விடைத்தாள்கள் வரும்பட்சத்தில் தனியாா் பள்ளி ஆசிரியா்களையும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அழைக்கப்படுவா் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிளஸ் 1 விடைத்தாள்கள் திருத்தம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னதாக கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, ஒசூா் ஆா்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரு மையங்களிலும் கடந்த ஏப்.10-ஆம்தேதி தொடங்கிய பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி 21-ஆம் தேதி நிறைவு பெற்றது.

இதையடுத்து தற்போது அந்த இரு மையங்களிலும் பிளஸ் 1 விடைத்தாள்களைத் திருத்தும் பணி நடைபெற்று வருவதாகக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com