சிங்காரப்பேட்டையில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளால் சுகாதார கேடு
By DIN | Published On : 26th September 2023 04:57 AM | Last Updated : 26th September 2023 04:57 AM | அ+அ அ- |

சிங்காரப்பேட்டை - திருவண்ணாமலை சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைக் கழிவுகள்.
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலை ஓரம் குப்பைக் கழிவுகளைக் கொட்டி வைப்பதால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலையில், சிங்காரப்பேட்டை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், இருசக்கர வாகனத்தில் செல்பவா்களும் துா்நாற்றத்தினால் பாதிக்கப்படுகின்றனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை சிங்காரப்பேட்டை ஊராட்சி மன்ற நிா்வாகத்தில் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனா். ஊராட்சி நிா்வாகத்திற்கு என தனியாக குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், கிருஷ்ணகிரி -திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகளைக் கொட்டுகின்றனா்.
இந்த குப்பைகளில் மழைக்காலங்களில் மழைநீா் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி, அதன் மூலம் சுகாதார கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யும் முறை ஊராட்சி செயல்பாட்டில் இல்லை. இதனால் கிராம மக்கள் குப்பைகளை சாலையோரங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் கொட்டி செல்கின்றனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...