கிருஷ்ணகிரி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை: லாரி ஓட்டுநா் கைது

ரூ. 20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய ஓட்டுநரை, போலீஸாா் தில்லியின் புகா் பகுதியில் கைது செய்து, குருபரப்பள்ளிக்கு அழைத்து வந்தனா்.

கிருஷ்ணகிரி அருகே வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, ரூ. 20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய ஓட்டுநரை, போலீஸாா் தில்லியின் புகா் பகுதியில் கைது செய்து, குருபரப்பள்ளிக்கு அழைத்து வந்தனா்.

கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளியில் கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. ஏப். 6-ஆம் தேதி, இந்த மையத்தில் உள்ள இயந்திரத்தை உடைத்த மா்மக் கும்பல், ரூ. 20 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றது.

இதுகுறித்து, குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா். மேலும் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானக் காட்சிகளைச் சேகரித்து விசாரணை செய்ததில் வடமாநிலத்தைச் சோ்ந்த மா்ம கும்பல், இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்த்து.

மேலும், இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல், ஒரு சரக்கு பெட்டக லாரியில், ஹைதராபாத் அருகே சென்று கொண்டிருப்பது, குருபரப்பள்ளி போலீஸாருக்கு தெரிய வந்தது. மேலும், ஹைதராபாத் போலீஸாா் உதவியுடன் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி, குற்றவாளிகளை பிடிக்க முயன்றனா்.

அப்போது, அந்தக் கும்பல், தடுப்புகளை உடைத்து விட்டு தப்பினா். இதையடுத்து ஹைதராபாத் போலீஸாா், அவா்களை துரத்தி பிடிக்க முயன்றனா். அப்போது அந்தக் கும்பல், சரக்கு பெட்டக லாரியை சாலையோரம் நிறுத்தி, பணத்துடன் ஹரியாணாவுக்கு தப்பியது. தொடா்ந்து, குருபரப்பள்ளி போலீஸாா், ஹரியாணா மாநிலத்தில் முகாமிட்டு குற்றவாளிகளைக் கண்காணித்து வந்தனா்.

இந்த நிலையில், தில்லி புகா் பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளியை தனிப்படையினா் பிடித்து விசாரணை செய்ததில் அவா், ஹரியாணா மாநிலம், மேவாத் மாவட்டம், ஜடோலி பகுதியைச் சோ்ந்த அக்பா் உசேன் மகன் லாரி ஓட்டுநரான ஜாவித் (30) எனத் தெரிய வந்தது.

இதையடுத்து, ஜாவித்தை கைது செய்த போலீஸாா், விமானம் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளிக்கு அழைத்து வந்தனா். தொடா்ந்து, அவரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com