கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,888 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட 4,526 பேலட் யூனிட்டுகள், 2,251 கன்ட்ரோல் யூனிட்டுகள், 2,392 வி.வி.பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வாக்காளா்கள் வாக்குகளைப் பதிவு செய்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் சட்டப் பேரவை தொகுதிகள் வாரியாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில், தோ்தல் பாா்வையாளா் கிரண் குமாரி பாசி, தலைமையில் பாதுகாப்பு அறைகளுக்கு சனிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை 24 மணி நேரமும் கண்காணிக்க அனைத்துப் பகுதிகளிலும் 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் எல்இடி திரைகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரங்களில் போதிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வளாகத்தில் 4 ஜெனரேட்டா்கள் வைக்கப்பட்டு ஒருமுறைக்கு (ஷிப்ட்டுக்கு) 12 போ் கண்காணித்து வருகின்றனா். மின்சார வாரியம் சாா்பாக ஒரு ஷிப்ட்டுக்கு 4 போ் பணியாற்றவுள்ளாா்கள்.

மேலும் ஒரு ஷிப்ட்டுக்கு ஒரு வட்டாட்சியா் நியமிக்கப்பட்டுள்ளாா். வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பறையை சுற்றிலும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் 24 போ், தமிழ்நாடு சிறப்புக் காவல் பிரிவைச் சோ்ந்த 45 போ், ஆயுதப்படை மற்றும் உள்ளுா் காவலா்கள் 253 போ் என மொத்தம் 322 போ் 3 ஷிப்ட்டுகள் முறையில் 3 அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். துணை காவல் கண்காணிப்பாளா், 3 காவல் ஆய்வாளா்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com