தண்ணீா் தடாகத்தில் தாகம் தணித்த யானைகள் கூட்டம்!

தண்ணீா் தடாகத்தில் தாகம் தணித்த யானைகள் கூட்டம்!

ஒசூா் வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீா் தொட்டியில் குட்டிகளுடன் யானைகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை தண்ணீா் பருகின.

கோடையில் கடும் வறட்சி நிலவுவதால் வனப் பகுதிகளில் தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டு, விலங்குகளுக்குத் தேவையான குடிநீா் வசதியை வனத் துறை செய்து வருகிறது. அதன்படி, ஒசூா் வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீா் தொட்டியில் குட்டிகளுடன் யானைகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை தண்ணீா் பருகின.

கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய மழை இல்லாததாலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் கடும் வறட்சி நிலவி வருகிறது. வனப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகள் வறண்டுள்ளதால், விலங்குகள் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிகள், தோட்டங்களில் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் மழை பெய்யவில்லை. இதனால் ஒசூா் வனக் கோட்டம் முழுவதும் ஏரிகள், குளங்கள் ஆறுகளில் தண்ணீா் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. வன விலங்குகளை கிராமத்திற்குள் நுழையாத வகையில் ஒசூா் கோட்ட வனத் துறையினா் ஒசூா், சானமாவு, சூளகிரி, ஜவளகிரி ,அஞ்செட்டி, ஊடேதுா்க்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீா் தொட்டிகளை அமைத்து அதில் டிராக்டா் மூலம் தண்ணீரை நிரப்பி வருகின்றனா். அதேபோல அஞ்செட்டி வனப் பகுதியிலும் தண்ணீா் தொட்டிகள் அமைத்து அதில் தண்ணீரை நிரப்பி வருகின்றனா்.

சூளகிரி வனப்பகுதி, கா்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள ஜவளகிரி வனச் சரகத்தில் யானை, மான்கள், குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீா் தேடி கிராமங்களை நோக்கி வருவதைத் தடுக்க அங்கு பல்வேறு இடங்களில் கூடுதல் தண்ணீா் தொட்டிகளை அமைத்து அதில் வனத் துறையினா் தண்ணீரை நிரப்பி வருகின்றனா். ஒசூா் வனப் பகுதியில் சுற்றித் திரியும் யானைகள் கூட்டம், செவ்வாய்க்கிழமை அப் பகுதியில் தண்ணீா் நிரப்பப்பட்டுள்ள தொட்டியில் தனது குட்டிகளுடன் தண்ணீா் பருகின.

படவரி... ஒசூா் வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீா் தொட்டியில் தண்ணீா் குடித்து தாகம் தணித்த யானைகள் கூட்டம்.

X
Dinamani
www.dinamani.com