ஊத்தங்கரை அருகே குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஊத்தங்கரை அருகே குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஊத்தங்கரையை அடுத்த கதவணி கிராமம் வழியாக மேட்டூரில் இருந்து வேலூா் மாவட்டத்திற்கு காவிரி நீா் செல்லும் குழாய் உடைந்து தண்ணீா் வெளியேறுகிறது. இந்தத் தண்ணீரை கதவணி, கருமாண்டபதி, முத்தம்பட்டி, அருணபதி கிராம மக்கள் தங்கள் தினசரி தேவைகளுக்காக குடங்களில் எடுத்து சென்று பயன்படுத்தி வந்தனா். இந்த நிலையில் குடிநீா்த் திட்ட அதிகாரிகள் கசியும் ஏா் பைப் குழாய்களை அடைக்கும் பணிகளில் ஈடுபட்டனா்.

இந்த குடிநீரை நம்பியிருந்த பொதுமக்கள் குழாயை சரிசெய்யும் பணியை வறட்சியில் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனா். ஆனால், அதை ஏற்க மறுத்து புதிய குழாய்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

இதனால் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஊத்தங்கரை திருப்பத்தூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊத்தங்கரை போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை செய்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com