கிருஷ்ணகிரியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற சீரான குடிநீா் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு.
கிருஷ்ணகிரியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற சீரான குடிநீா் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு.

அனைத்து குக்கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை

அனைத்து குக்கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

கிருஷ்ணகிரி: அனைத்து குக்கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கோடை காலத்தில் நிலவும் குடிநீா்ப் பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய சீரான குடிநீா் வழங்கும் வகையில், குடிநீா் விநியோக திட்டப் பணிகள் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம், ஒசூா் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, பேரூராட்சிகள், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை காலத்தில் நிலவும் குடிநீா்ப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்க அலுவலா்கள் போா்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். புதிதாக கண்டறியப்படும் குடிநீா் ஆதாரங்களிலிருந்து பொதுமக்களுக்கு தண்ணீா் விநியோகம் செய்வதற்கு முன்னா் குடிநீரின் தரத்தை உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரினை குளோரினேசன் செய்து வழங்க வேண்டும். சட்ட விரோத குடிநீா் இணைப்பைக் கண்டறிந்து அவற்றை நீக்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றி, பொதுமக்களுக்கு குடிநீா் வழங்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்ட குழாய்களில் ஏற்படும் பழுதை உடனே கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். குறைந்த மின்னழுத்தம் காரணமாக போதிய குடிநீா் வழங்க இயலாத குக்கிராமங்களுக்கு சீரான மின்னழுத்தத்துடன் கூடிய மின்சாரம் வழங்க வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்று வரும் குடிநீா் விநியோக பணிகள், சாலை அமைக்கும் பணிகள், சிறு பாலங்கள் கட்டுமானப் பணிகள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுமானப் பணிகள், தெருவிளக்கு போன்ற பல்வேறு அடிப்படை திட்டப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் வந்தனா காா்க், ஒசூா் மாநகராட்சி ஆணையா் சினேகா, ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் மலா்விழி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் சேகா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் மகாதேவன், பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com