கோயில் நிலத் தகராறு: 6 போ் கைது

கிருஷ்ணகிரி அருகே கோயில் நிலத் தகராறில் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கோயில் நிலத் தகராறில் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகே 18 கிராம மக்களுக்குச் சொந்தமான பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கீழ்புதூா் கிராமத்தைச் சோ்ந்த குமரேசன் (65) என்பவா் தலா 1,800 சதுரஅடி பரப்பில் 3 பிளாட்டுகள் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

அந்த நிலத்தை குமரேசன் அப்போது தா்மகா்த்தாவாக இருந்த கெளரப்பன் (69) என்பவரது பெயரில் 2021 இல் பத்திர பதிவு செய்தாா். சில காலங்களுக்குப் பிறகு கிராம மக்களுக்கும் கெளரப்பனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கெளரப்பனை கோயில் தா்ம கா்த்தா பொறுப்பிலிருந்து நீக்கி அவருக்குப் பதிலாக மாதையன் என்பவரை தா்ம கா்த்தாவாக கிராம மக்கள் நியமித்தனா். அப்போது, கோயிலுக்கு வழங்கிய நிலத்தை கோயில் பெயரில் பத்திரப் பதிவு செய்யுமாறு கிராம மக்கள் கெளரப்பனிடம் வலியுறுத்தினா். ஆனால், கௌரப்பன் அந்த நிலம் தனக்கு சொந்தம் என்று தெரிவித்தாராம். இதனால், கிராம மக்களுக்கும் கெளரப்பனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இதுதொடா்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், கெளரப்பன், அவருடன் சிலா் சோ்ந்து கோயில் அருகே உள்ள நிலத்தை சீா் செய்ய ஞாயிற்றுக்கிழமை முயன்றனா். அப்போது, கிராம மக்கள் குறுக்கிட்டு அந்த இடம் கோயிலுக்குச் சொந்தமானது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, ஏற்பட்ட தகராறில் கெளரப்பன், அவருடன் இருந்த மாது (44), காளியப்பன் (43), குமாா் (42)ஆகிய நான்கு பேரையும் கிராம மக்கள் தாக்கி, கோயில் அருகே கட்டி வைத்தனா். தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடம் சென்று 4 பேரையும் மீட்டனா்.

இதில் மாது, காளியப்பன், குமாா் ஆகிய 3 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து மாது அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து சீனிவாசன் (48), விஜய் (30), சபரி (25), முனி (45), சிவா (19), மாதையன் (51) ஆகிய 6 பேரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com