கிருஷ்ணகிரியில் டெங்கு ஒழிப்பு பணி

Published on

கிருஷ்ணகிரி நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணியை கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி நகராட்சியில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு ஆணையா் ஸ்டான்லி பாபு முன்னிலை வகித்தாா். இந்த பணி குறித்து நகா்மன்றத் தலைவா் தெரிவித்தது:

கிருஷ்ணகிரி ஊரக பகுதிகளை ஒட்டியுள்ள, நகராட்சியின் 15 முதல், 19 வாா்டுகளில் டெங்கு நோய் பாதிப்பு இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அந்தப் பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் டெங்கு விழிப்புணா்வு பணி தற்போது, தொடங்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ள பகுதிகளில் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியுள்ள கழிவுநீா் கால்வாய்கள் தூா்வாரப்பட்டு, கொசுமருந்து அடிக்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தொடா்ந்து இப்பகுதிகளில் உள்ள வீடுகள்தோறும் சென்று குளிா்சாதனப் பெட்டியின் பின்புறம் தண்ணீா் தேங்கியுள்ளதா என்பதை ஆய்வு செய்து, விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா். மேலும் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தாா்.

அப்போது, துப்புரவு அலுவலா் ராமகிருஷ்ணன், இளநிலை பொறியாளா்கள் உலகநாதன், அறிவழகன் களப்பணி உதவியாளா் செல்வம், துப்புரவு ஆய்வாளா்கள் ராமச்சந்திரன், மாதேஸ்வரன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com