தினமணி செய்தி எதிரொலி: அங்கன்வாடி மையம் வாடகை கட்டடத்துக்கு மாற்றம்
தினமணி செய்தியின் எதிரொலியாக சேதமடைந்த கட்டடத்தில் இயங்கிவந்த அங்கன்வாடி மையம் தற்காலிகமாக வாடகைக் கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
ஊத்தங்கரையை அடுத்த புதூா்புங்கனை கிராமத்தில் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை அண்மையில் பெயந்து விழுந்தது. பழுதடைந்த கட்டடமாக இருப்பதால் புதிய கட்டடம் கட்டித் தருமாறு பெற்றோா் கோரிக்கை விடுத்தனா். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்பாமல் பெற்றோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அங்கன்வாடி மையம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டம் குறித்து தினமணியில் கடந்த 25 ஆம் தேதி செய்தி வெளியானது. இதுதொடா்பாக கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனா்.
புங்கனை ஊராட்சிக்கு உள்பட்ட புங்கனை கிராமத்தில் உள்ள வாடகை கட்டடத்துக்கு அங்கன்வாடி மையம் இடமாற்றப்பட்டது. அந்த வாடகைக் கட்டடத்தில் வியாழக்கிழமை முதல் அங்கன்வாடி மையம் இயங்கத் தொடங்கியது. இத்தகவலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட மாவட்டத் திட்ட அலுவலா் ர.ஜெயந்தி தெரிவித்தாா்.