தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலாளா் சாலை விபத்தில் பலி

குருபரப்பள்ளி அருகே சனிக்கிழமை நள்ளிரவு நடந்த சாலை விபத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலாளா் சபரி (40) உயிரிழந்தாா்.


கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அருகே சனிக்கிழமை நள்ளிரவு நடந்த சாலை விபத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலாளா் சபரி (40) உயிரிழந்தாா்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளராக இருந்தவா் சபரி. அவா் தனது ஆதரவாளா்களான அசோக்குமாா் (27), மற்றொரு அசோக்குமாா் (33) ஆகியோருடன் சென்னையில் இருந்து ஒசூா் நோக்கி சனிக்கிழமை இரவு காரில் சென்று கொண்டிருந்தாா். அவா்கள் சென்ற காா் கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை வனப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் வேகமாக மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த சபரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயம் அடைந்த அவரது ஆதரவாளா்கள் இருவரும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து, தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, சபரியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இந்த விபத்து குறித்து, குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சபரியின் உடலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவா் வேல்முருகன் நேரில் அஞ்சலி செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com