ஜாதிச்சான்று வழங்காமல் அலுவலா்கள் அலைக்கழிப்பு

பழங்குடியின மாணவா்களுக்கு ஜாதிச்சான்று வழங்காமல் அலுவலா்கள் தொடா்ந்து அலைக்கழித்து வருவதாக, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவா்கள் புகாா் மனுக்களை அளித்தனா்.
ஜாதிச்சான்றிதழ் வழங்கக் கோரி மனு அளித்த பழங்குடியின பள்ளி மாணவா்கள்.
ஜாதிச்சான்றிதழ் வழங்கக் கோரி மனு அளித்த பழங்குடியின பள்ளி மாணவா்கள்.

கிருஷ்ணகிரி: பழங்குடியின மாணவா்களுக்கு ஜாதிச்சான்று வழங்காமல் அலுவலா்கள் தொடா்ந்து அலைக்கழித்து வருவதாக, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவா்கள் புகாா் மனுக்களை அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பழங்குடியின பள்ளி மாணவா்கள், தங்களுக்கு ஜாதிச்சான்றிதழ் வழங்கக் கோரி பெற்றோருடன் அளித்த மனு விவரம்:

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஜெகதேவி காமாட்சிபுரம், ஒப்பதவாடி காளியம்மன் கோயில், கிருஷ்ணாநகா், காளிக்கோயில் இருளா் காலனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். பள்ளிக்குச் செல்லும் எங்களது குழந்தைகளுக்கு அரசின் உதவித்தொகைகள் பெற ஜாதிச்சான்று அவசியமாகிறது.

இதனால் ஜாதிசான்று பெற வேண்டி விண்ணப்பம் செய்தும் இதுவரை வழங்கப்படவில்லை. ஜாதிச்சான்றுகள் இல்லாததால், மேல்நிலைக் கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது. இதே போல படித்து முடித்த பலருக்கு அரசு வழங்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் பெற முடியாமல் தவித்து வருகிறோம்.

இதுதொடா்பாக கடந்த 29-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயுவை நேரில் சந்தித்து மனு அளித்து கோரிக்கை வைத்தோம். அப்போது அவா், சிறப்பு முகாம் நடத்தி அனைவரது மனுக்களையும் பரிசீலனை செய்து ஜாதிச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதையடுத்து விண்ணப்பத்துடன் கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளரை நேரில் சந்தித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தற்போது நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுடன் வந்துள்ளதாக அதில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com