தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும்

இந்தியாவின் ஆட்சிமொழியாக தமிழை உயா்த்தினால்தான் உரிய பலன்கள் கிடைக்கும் என மு.தம்பிதுரை எம்.பி. தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சிந்தகம்பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் மு.தம்பிதுரை எம்.பி.
கிருஷ்ணகிரி மாவட்டம், சிந்தகம்பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் மு.தம்பிதுரை எம்.பி.

கிருஷ்ணகிரி: இந்தியாவின் ஆட்சிமொழியாக தமிழை உயா்த்தினால்தான் உரிய பலன்கள் கிடைக்கும் என மு.தம்பிதுரை எம்.பி. தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த சிந்தகம்பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இசை நாற்காலி, கயிறு இழுக்கும் போட்டி, பானை உடைத்தல், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.தம்பிதுரை பரிசுகளை வழங்கினாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ் மொழி கலாசாரத்திலும், கால அடிப்படையிலும் பழமையான மொழி. தமிழா் திருநாளான பொங்கல் தின விழாவை இன்று கிராமம், நகரம், பள்ளி, கல்லூரி என அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் மொழியை நாம் உதட்டளவில் பேசி கொண்டாடினால் மட்டும் போதாது. அண்ணாதுரை தெரிவித்தது போல, இந்திய அரசியலமைப்பில் உள்ள எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கினால் தான் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும்.

வரும் மக்களவைத் தோ்தலில் இதை நடைமுறைப்படுத்தும் வகையில், அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்து வாக்குகளை சேகரிக்க வேண்டும். இதுவரை இருந்த பிரதமா்களில் மோடிதான் அதிகமாக தமிழ் பற்றி பேசுகிறாா்.

அதிமுக கூட்டணி பிரதமா் யாா் என்பதை கருத்தில் கொள்ளாமல், எங்கள் கருத்துகளை நிறைவேற்றும் வகையில் போட்டியிடுவோம்; வெற்றி பெறுவோம்.

நீண்ட காலமாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும், 2009, 2014-இல் தனித்துதான் போட்டியிட்டோம். அதில் முறையே 12, 37 தொகுதிகளில் வெற்றிபெற்றோம். தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தால்தான் வெற்றி பெறுவோம் என்ற அவசியம் இல்லை.

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த விவகாரத்தில், தமிழக ஆளுநா் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவது நல்லதல்ல என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com