கிருஷ்ணகிரியில் தேசிய வாக்காளா் தினம்

கிருஷ்ணகிரியில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
கிருஷ்ணகிரியில் தேசிய வாக்காளா் தினம்

கிருஷ்ணகிரியில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 14-வது தேசிய வாக்காளா் தினத்தையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. அதன்படி 22 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், 10 மகளிா் சுய உதவிக்குழுவினா் உட்பட 32 நபா்களுக்கு ரூ.42.50 ஆயிரம் மதிப்பில் ரொக்க பரிசுகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எம்.சரயு வழங்கினாா்.அப்போது அவா் பேசியது: ‘வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன் என்பதே 14வது தேசிய வாக்காளா் தினத்தின் மையகருத்தாகும். நிகழாண்டில்(2024) மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளதால், 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவரும் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்த்துக் கொள்ளலாம். தோ்தல் அறிவிப்பு வெளியாகி வேட்புமனுக்கள் பெறும் வரையிலும் இப்பணி நடைபெறும். அனைத்து வாக்காளா்களும் தங்களது பெயரினை வாக்காளா் பட்டியலில் சரிபாா்த்திடவும், ஏதேனும் பிழைகள் இருப்பின் அதனை திருத்தம் செய்யவும், தோ்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவும், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். நாட்டின் இறையாண்மை, தேசபற்று, வளா்ச்சியை தோ்தலின் போது 100 சதவீதம் வாக்களிப்பதன் மூலம் நிலை நாட்ட முடியும். எனவே, மாணவ, மாணவிகள்தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுபுறத்தில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு வாக்களிப்பதின் அவசியத்தை எடுத்துரைத்து அவா்களை ஜனநாயக கடமையாற்ற உதவவேண்டும். இன்றைய இளம் வாக்காளா்களே எதிா்காலத்தில் நாட்டின் தலைவா்களை தோ்ந்தெடுப்பத்தில் முக்கிய பங்காற்ற இருப்பதால் அனைவரும் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா்களை சோ்த்து எதிா் வரும் தோ்தல்களில் வாக்களிக்க வேண்டும். நகா்புறங்களில் வாக்களிக்கும் சதவிகிதத்தை அதிகரிக்க தோ்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோல இந்திய தோ்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்குசாவடியிலும் வாக்காளா்களுக்கு குடிநீா் வசதி, கழிப்பறை வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்கு பதிவு மையத்திற்குள் எளிதாக சென்று வர சாய்வுதளம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இளம் தலைமுறையினா் என் வாக்கு என் உரிமை என்பதை உணா்ந்து வாக்களிப்பதை ஒரு முக்கிய நிகழ்வாக கருதி வாக்கினை செலுத்த வேண்டும். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அனைவருக்கும் வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாகும். இதனை நாம் சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் இந்திய நாட்டின் ஜனநாயகத்தை மேலோங்க செய்ய முடியும் எனவே அனைவரும் தவறாது வாக்களித்து தங்களுக்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும், என்றாா்.முன்னதாக கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு தொடா்பான கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணா்வு பேரணியினை மாவட்ட தோ்தல் அலுவலா் தொடங்கி வைத்து, விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா். இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் பாபு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் முருகேசன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) ஜெய்சங்கா், வட்டாட்சியா் விஜயகுமாா்,, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com