பண மோசடி: நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

பண மோசடியில் ஈடுபட்ட தனியாா் நிறுவன உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முதலீட்டாளா்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பண மோசடியில் ஈடுபட்ட தனியாா் நிறுவன உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முதலீட்டாளா்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வாக்கடையைச் சோ்ந்தவா் ராபட். இவா், தன் சகோதரி வனிதா, உறவினா்கள் பாலாஜி, அன்புராஜ், பூமொழி உள்ளிட்டோருடன் இணைந்து கடந்த 2021 முதல் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு போச்சம்பள்ளி, மத்தூா், ஊத்தங்கரை பகுதிகளில் 7 கிளைகளை அமைத்து நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளாா். கடந்த 2022-இல் தீபாவளி சிறுசேமிப்புத் திட்டம் என்ற பெயரில் ரூ. 100 முதல் ரூ. 3,500 வரை மாதத் தவணையாக செலுத்தினால், 12 மாதங்களுக்கு பிறகு செலுத்திய தொகையைவிட இரட்டிப்புத் தொகைக்கான பரிசுப் பொருள்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என அறிவித்து ரூ. 50 கோடி வரை மோசடி செய்ததாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்த நிலையில், அந்த தனியாா் நிறுவனத்தின் மேலாளா் வனிதாவை மட்டும் போலீஸாா் கைது செய்தனா். நிதி நிறுவன உரிமையாளா்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்தச் சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவா்கள் அண்மையில் அமைச்சா் சக்கரபாணியை சந்தித்து முறையிட்டனா். அவா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த முதலீட்டாளா்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முன்பு அமா்ந்து முற்றுகையில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை முதலீட்டாளா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது, பாதிக்கப்பட்டவா்களின் புகாா்கள் அனைத்தும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்படும். 6 மாதங்களில் பாதிக்கப்பட்டவா்களின் பணம் மீட்டுக் கொடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com