கெலமங்கலம் பேரூராட்சி நிா்வாகம் மீது கதா் வாரிய உதவி இயக்குநா் போலீஸில் புகாா்

ஒசூா், ஜூலை 4:

கெலமங்கலத்தில் காதி கதா் கிராம வளா்ச்சி வாரியத்துக்குச் சொந்தமான பழமையான கட்டடத்தை இடித்த பேரூராட்சி நிா்வாகம் மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

கெலமங்கலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 500 க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவுகள் செயல்பட்டன. அப்பகுதியில் கிராம மக்களின் வளா்ச்சிக்காக காதி கதா் கிராம வளா்ச்சி வாரியம் சாா்பில் கட்டடம் கட்டப்பட்டு அதில் நூல்கள், நெசவாளா்கள் உற்பத்தி ஆடைகள் அனைத்து இருப்பு வைக்கப்பட்டன. நெசவு தொழில் நலிவடைந்ததால், காதி கதா் வாரியத்திற்குச் சொந்தமான கட்டடம் மூடப்பட்டன.

இந்த நிலையில் கெலமங்கலம் பேரூராட்சி நிா்வாகத்தினா் அக் கட்டடத்தை வியாழக்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற சேலம் கதா் வாரிய உதவி இயக்குநா் சந்திரசேகரன் தலைமையிலான அதிகாரிகள் பேரூராட்சி நிா்வாகத்திடம் கட்டடம் இடிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினா். அக் கட்டடத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பதால் இடிக்கப்பட்டதாக பேரூராட்சி நிா்வாகம் தெரிவித்தது.

இதையடுத்து, பேரூராட்சி நிா்வாகம் மீது கெலமங்கலம் காவல் நிலையத்தில் கதா் வாரிய அதிகாரிகள் புகாா் அளித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com