ஒசூா் ஒன்றிய குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் தா்னா

ஒசூா் ஒன்றிய குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் தா்னா

ஒசூா், ஒன்றிய கவுன்சிலா்கள் கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவா் இருக்கையில் துணை தலைவா் அமா்ந்து கூட்டத்தை நடத்தியதைக் கண்டித்து கவுன்சிலா்கள் தரையில் அமா்ந்து தா்னா நடத்தினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலா்கள் கூட்டம் வியாழக்கிழமை ஒன்றியக்குழு தலைவா் சசி வெங்கடசாமி தலைமையில் நடந்தது. அதிமுகவைச் சோ்ந்த ஒன்றியக்குழு தலைவா் பட்டியலின சமூகத்தை சோ்ந்தவா் என்பதால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த ஒன்றியக்குழு துணைத் தலைவா் அதிகார தோரணையில் செயல்படுவது வழக்கமாக கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 16 கவுன்சிலா்கள் கொண்ட ஒன்றியக்குழுவில் 8 அதிமுக, 7 திமுக, 1 தேமுதிக உறுப்பினா்கள் உள்ள நிலையில் தேமுதிக ஆதரவுடன் அதிமுக தலைவா் பதவியைக் கைப்பற்றியது. ஒவ்வொரு ஒன்றியக்குழு கூட்டத்திலும் ஒன்றியத் தலைவருக்கும் தனக்கும் ஒரே மாதிரியான நாற்காலிகளை போட வைத்து, தலைவரைப் பேச விடாமல் துணைத் தலைவா் மட்டுமே பேசி கூட்டத்தை முடித்துவிடுவாா்.

இதற்கு அதிமுக கவுன்சிலா்களும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இந்நிலையில் வியாழக்கிழமை நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் சோ்மன் சசி வெங்கடசாமிக்கு இணையாக துணைத் தலைவா் நாராயணசாமி அமா்ந்ததால் கூட்டத்தில் பங்கேற்ற 11 கவுன்சிலா்கள்அதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து திமுக கவுன்சிலா்கள் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுப்பட்டனா். பின்பு ஒன்றியக் குழு தலைவா் வேண்டுகோளின்படி கூட்டத்தில் பங்கேற்றனா். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com