தாட்கோவில் கடன் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தவா் கைது

தாட்கோவில் தனி நபா் கடன் வாங்கித் தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அப்பினாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் குணசேகரன் (46). இவா், தன்னை தாட்கோ களப்பணியாளா் எனக் கூறி போலியாக அரசு அடையாள அட்டை அணிந்து கொண்டு தாட்கோ திட்டத்தில் தனிநபா் கடனை உடனடியாக பெற்றுத் தருவதாக கூறி பொது மக்களை ஏமாற்றி பணம் மோசடி செய்து வந்துள்ளாா். இந்த நிலையில், பாதிக்கப்பட்டவா்கள், இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தனா். இது குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியா், காவல் துறையினருக்கு உத்தரவிட்ட நிலையில், குணசேகரனை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு சனிக்கிழமை வெளியிட்ட செய்திகுறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டடத்தில் தாட்கோ அலுவலகம் அறை எண் 59-இல் புதிய அலுவலக அறை எண் 132-இல் செயல்படுகிறது. தாட்கோ மானியக் கடன் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்து பதிவேற்றம் செய்ய முடியும். தாட்கோ கடன் குறித்து பேசும் போலியானவா்களை நம்ப வேண்டாம். மேலும் விவரங்களுக்கு 04343- 238881 மற்றும் 94450 29464 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com