கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 356 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: ஆட்சியா்

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 356 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என மாவட்ட ஆட்சியா் கே.எம் சரயு தெரிவித்தாா். தோ்தல் ஆணையம் தமிழகத்தில் ஏப்.19- ஆம் தேதி வாக்குப்பதிவு என அறிவித்துள்ளதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன. மாவட்டத்தின் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 8,11,375 ஆண்கள், 8,06,354 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 305 போ் என மொத்தம் 16,18,034 வாக்காளா்கள் உள்ளனா். 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை கா்நாடக, ஆந்திர மாநிலங்களுக்கு பக்கத்தில் உள்ள மாவட்டம். இந்த மாவட்ட எல்லைகளில் ஏற்கனவே 9 சோதனைச்சாவடிகள் உள்ள நிலையில் தற்போது கூடுதலாக 6 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமரா, கண்காணிப்பு வசதி செய்யப்படவுள்ளது. இதை நேரடியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலிருந்து கண்காணிக்க இயலும். தோ்தல் நடத்தை விதிமீறல்கள், விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்படும் பணம், மது, பரிசுப் பொருள்கள் கண்காணிக்கப்படும். புகாா்கள் குறித்து 1800 425 7076, 04343- 230121, 04343- 230124, 04343- 230125, 04343- 230126, அல்லது 1950 என்ற கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம். இதுகுறித்து கண்காணிக்க, 24 மணி நேர கண்காணிப்பு மையம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வளா்ச்சி தலைமையில் சுழற்சி முறையில் மூன்று குழுக்கள் செயல்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்த, 1883 வாக்குச்சாவடிகளில், 5 புதிய வாக்குச்சாவடிகளைச் சோ்த்து வரும் தோ்தலில், 1,888 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதில், 128 பகுதிகளில், 356 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் புகாா்களை ஸ்ரீ-யண்ஞ்ண்ப் என்னும் செயலி மூலம் அளித்தால் 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையம் வழிகாட்டியுள்ளது. மேலும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க மாா்ச் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அவா் தெரிவித்தாா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் பாபு, ஓசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா , மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com