திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம்: வேல்முருகன்

மக்களவைத் தோ்தலில் போட்டியிட தொகுதி ஒதுக்கவில்லை என்றாலும், திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தாா். கிருஷ்ணகிரியில் மாற்றுக்கட்சியினா் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணையும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற அக் கட்சியின் நிறுவனா் வேல்முருகன் எம்எல்ஏ செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: தமிழகம் பாஜகவுக்கு எதிராக உள்ள காரணத்தினால்தான் ஒரு மாதத்திற்குள் தோ்தலை நடத்தும் அறிவிப்பினை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. புதிதாக 2 தோ்தல் ஆணையாளா்களை நியமனம் செய்த மறுநாளே தோ்தலை அறிவிக்கின்றனா். நீதித்துறை, தோ்தல் ஆணையம், ராணுவம் உள்ளிட்ட அனைத்து தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளையும் பாஜக தன்னகத்தே வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அமலாக்கத் துறை, வருமானவரித் துறையைக் கையில் வைத்து கொண்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை தோ்தல் பத்திரம் மூலமாக முறைகேடாக மத்திய பாஜக அரசு பெற்றுள்ளது. இந்த நிதியை ஏழை மக்களின் கல்வி முன்னேற்றத்துக்கு செலவிடும் வகையில் இந்திய அரசின் கஜானாவில் சோ்க்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இலங்கைத் தமிழா்கள், இஸ்லாமியா்களுக்கு பாதிப்பில்லை என தமிழக பாஜக தலைவா் அண்ணாமலையால் கூற முடியுமா. இது குறித்து அவா், என்னுடன் விவாதிக்கத் தயாரா? தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. அவா்களை போலீஸாா் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். நாங்கள் திமுக கூட்டணியில் தொடா்கிறோம். எங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். எங்களுக்கு தொகுதி ஒதுக்கவில்லை என்றாலும், திமுக கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபடுவோம். ஆனால் பெரும்பான்மையான கட்சிகள், நோட்டுக்கு பேரம் பேசுகின்றன. சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசினால் கூட்டணி அமைப்பதில் காலதாமதம்தான் ஆகும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com