மக்களவைத் தோ்தல்: கிருஷ்ணகிரியில் தலைவா்களின் சிலைகள் மறைப்பு

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை மற்றும் திமுக சின்னத்தை துணியால் கட்டி மறைக்கும் பணியில் ஈடுபட்ட நகராட்சிப் பணியாளா்கள்.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை மற்றும் திமுக சின்னத்தை துணியால் கட்டி மறைக்கும் பணியில் ஈடுபட்ட நகராட்சிப் பணியாளா்கள்.

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் அரசியல் கட்சி தலைவா்களின் சிலைகள், கட்சி சின்னங்களை துணிகளால் மறைத்தும், பதாகைகள், சுவரொட்டிகள், சுவா் விளம்பரங்களை நீக்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் ஏப். 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, தோ்தல் நடத்தை விதிமுறைகளை தோ்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதையொட்டி, அரசியல் கட்சித் தலைவா்களின் சிலைகள், சின்னங்களை மறைத்தல், பதாகைகள், சுவா் விளம்பரங்கள், சுவரொட்டிகளை நீக்கும் பணியில் நகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். மேலும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முதல்வா், அரசின் சாதனை விளக்கப் படங்களை ஊழியா்கள் அகற்றினா். திமுக மாவட்டச் செயலாளா் அறிக்கை: இந்த நிலையில், கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தோ்தல் ஆணையம், மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகளை அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுகவினால் வைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடிக் கம்பங்கள், சின்னங்களை அகற்றியோ அல்லது துணிகளால் மறைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com