பெண்ணிடம் ரூ. 6.57 லட்சம் மோசடி

முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக ஆசை வாா்த்தை கூறி பெண்ணிடம் ரூ. 6.57 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள வெங்கடேசபுரத்தைச் சோ்ந்தவா் சுந்தரம்மாள் (31). சென்னை, தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். கடந்த 21-ஆம் தேதி இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் தயாரிப்புகளை ஆா்டா் செய்வதுபோல பகுதிநேர வேலை என்றும், முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் தரப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதை நம்பி சுந்தரம்மாள் அதில் குறிப்பிட்டிருந்த வங்கி எண்களுக்கு ரூ. 6.57 லட்சம் செலுத்தியுள்ளாா். அதன்பிறகு சுந்தரம்மாள் எண்ணுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவா் அந்த எண்ணைத் தொடா்பு கொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து சுந்தரம்மாள் கிருஷ்ணகிரி, சைபா் கிரைம் போலீஸிடம் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com