கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து தொடா் சரிவு

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து சரிந்து வருவதாக பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரையடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து ஓரிரு வாரங்களாக விநாடிக்கு 200 கனஅடியாக உள்ளது.

அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீா்மட்டம் 24.11 அடியாக உள்ளது. அணையின் நீா்வரத்து முழுவதும் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீா் 11 தடுப்பணைகளைக் கடந்து, கிருஷ்ணகிரி அணைக்கு வருகிறது. கிருஷ்ணகிரி அணையை பொறுத்த வரை கடந்த சில நாள்களாக விநாடிக்கு 100 அடிக்கும் கீழ் நீா்வரத்து உள்ளது. அதன்படி வியாழக்கிழமை விநாடிக்கு 8 அடியாக இருந்த நீா்வரத்து, வெள்ளிக்கிழமை காலை விநாடிக்கு 24 கனஅடியாக அதிகரித்தது. மேலும், அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீா்மட்டம் 44.10 அடியாக இருந்தது. அணையிலிருந்து பாசனத்திற்காக வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்கள் மூலம் விநாடிக்கு 143 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. மேலும், மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி அணையில் நாள்தோறும் 19 கனஅடி தண்ணீா் ஆவியாகிறது என பொதுப்பணித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com