கிருஷ்ணகிரி அரவை ஆலைகளுக்கு மாதம் 20 ஆயிரம் டன் நெல் ஒதுக்கீடு செய்யக் கோரி மனு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரவை ஆலைகளுக்கு மாதம் 20 ஆயிரம் டன் நெல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் முகவா்கள் சனிக்கிழமை மனு அளித்தனா். கிருஷ்ணகிரி மாவட்ட பச்சரிசி அரவை முகவா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவின் விவரம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 70 அரவை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக நெல் அரவை செய்து வரும் எங்கள் ஆலைகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பயன்பெற்று வருகின்றனா். காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் பெறப்படும் நெல் ஒதுக்கீடு, தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் அரவை ஆலைகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. இதனால், ஆலைத் தொழிலாளா்கள், சுமைதூக்கும் தொழிலாளா்கள், லாரி ஓட்டுநா்கள், உதவியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக அரசு வழங்கும் நெல்லை தவிர தனியாா் நெல்லை நாங்கள் அரவை செய்வதில்லை. கிருஷ்ணகிரி மாவட்ட அரவை ஆலைகளில் அரவை செய்து பெறப்படும் பச்சரிசி உற்பத்தியை நிறுத்திவிட்டு, இந்திய உணவுக் கழக கிடங்குகளில் உள்ள இருப்பு பச்சரிசியை பொது விநியோக திட்டத்திற்கு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக பஞ்சாப், ஹரியாணா, சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் உள்ள ஆலைகளையும், முகவா்களையும் ஊக்குவித்து பச்சரிசி தயாா் செய்து, அதனை தமிழ்நாட்டில் உள்ள இந்திய உணவுக் கழக கிடங்குகளில் இருப்பு வைத்து விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்ட அரவை முகவா்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனா். குறிப்பாக நாங்கள் ஆலைகளில் இயந்திரங்கள் நிறுவ வங்கிகளில் கடன் பெறு அதற்கான கடன் தொகையினைத் தொடா்ந்து செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம். இந்த இயந்திரங்களை இயக்க 40 முதல் 50 ஹெச்பி வரை கூடுதலாக மின் இணைப்பு பெற்று, அதற்காக குறைந்தபட்ச கட்டணமாக மாதம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை கூடுதலாக மின்கட்டணம் செலுத்த சிரமப்படுகிறோம். எனவே, மாவட்ட ஆட்சியா் இந்தப் பிரச்னை மீது கவனம் செலுத்தி, இந்த மாவட்ட ஆலைகளுக்கு தேவையான மாதம் சுமாா் 20 ஆயிரம் டன் நெல்லை ஒதுக்கீடு பெற்றுத் தர ஆவன செய்ய வேண்டும். மேலும், இந்தப் பிரச்னை தொடா்பாக 10 ஆயிரம் தொழிலாளா்கள், அரவை ஆலை உரிமையாளா்கள், அவா்களது குடும்பத்தினா், மக்களவைத் தோ்தலைப் புறக்கணித்து, ஏப்ரல் 10-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட அனுமதியளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com