அதிமுக வேட்பாளா் ஜெயப்பிரகாஷை ஆதரித்து ஒசூரில் பிரசாரம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.
அதிமுக வேட்பாளா் ஜெயப்பிரகாஷை ஆதரித்து ஒசூரில் பிரசாரம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.

மத்திய மாநில அரசுகள் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

மத்திய, மாநில அரசுகள் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பேசினாா். கிருஷ்ணகிரி மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் வி.ஜெயப்பிரகாஷை ஆதரித்து ஒசூா், ராம்நகரில் சனிக்கிழமை மாலை தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது: காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் ஒசூா் தொகுதியில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்துள்ளாா். அப்போது மக்களுக்கான திட்டங்கள் எதுவும் அவா் செய்யவில்லை. இந்த நிலையில் அவா் எம்.பி.யாகி என்ன செய்யப்போகிறாா்? சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூா், ஒசூா் போன்ற பகுதிகளில் ஜிஎஸ்டி வரியால் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளன. அதேபோன்று சிறு வியாபாரிகளும் பாதிப்பு அடைந்துள்ளனா். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் மன அழுத்தத்தில் உள்ளனா். மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசும் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை ரூ. 1,000 வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் தோ்தலில் வெற்றி பெற்ற திமுக தகுதியுடைய மகளிருக்கு மட்டுமே ரூ. 1,000 வழங்கப்படும் எனக் கூறி மகளிரை ஏமாற்றி வருகிறது. இந்த தோ்தல் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டும் வகையில் அதிமுக வேட்பாளா் வி.ஜெயப்பிரகாஷுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவா் வெற்றி பெற்றால் மாங்கூழ் தொழிற்சாலை, ரோஜா மலா் வா்த்தக மையம் கொண்டு வரப்படும். கெலவரப்பள்ளி அணையில் கழிவுநீா்க் கலப்பதைத் தடுத்து ராமநாயக்கன் ஏரிக்கு அந்த நீரைக் கொண்டு சேமிக்கப்படும். மேக்கேதாட்டு அணை கட்டுவதை அதிமுக, தேமுதிக தடுத்து நிறுத்தும் என்றாா். இதில் முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டி, பகுதிச் செயலாளா்கள் ராஜூ, வாசுதேவன், சிறுபான்மைப் பிரிவைச் சோ்ந்த அராப்ஜான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com