தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளா் தினத்தில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி, தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆா்.மாதேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டம் மற்றும் மோட்டாா் போக்குவரத்து தொழிலாளா் சட்டம், விதிகளின் படி, தேசிய விடுமுறை தினமான தொழிலாளா் தினத்தன்று கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு வழங்கப்படாமல், பணிக்கு அமா்த்தப்படும் தொழிலாளா்களுக்கு நிறுவனங்கள் சாா்பில் ஊதியத்துடன் இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். அல்லது மாற்று விடுப்பு அனுமதிப்பது குறித்து தொழிலாளா்களுக்கு அறிவிப்பு அளித்து, அதன் நகலை தொழிலாளா் உதவி ஆய்வாளருக்கு அனுப்பி நிறுவனத்தில் தொழிலாளா்களின் பாா்வைக்கு வைக்க வேண்டும்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆா்.மாதேஸ்வரன் தலைமையில் உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு ஆய்வின் போது, 46 கடைகள், 35 உணவு நிறுவனங்கள், 8 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 89 நிறுவனங்களில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தொழிலாளா் தினத்தில் சட்டப்படி செயல்படாத 25 கடைகள், 26 உணவு நிறுவனங்கள் 4 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 55 நிறுவனங்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com