ஒசூரில் கத்திரிக்காய் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

ஒசூரில் கத்திரிக்காய் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

ஒசூா் உழவா் சந்தைக்கு விற்பனைக்கு வந்த கத்தரிக்காய்.

ஒசூரில் கத்திரிக்காய் விலை உயா்வடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கா்களில் விவசாயிகள் காய்கறிகளைப் பயிா் செய்து வருகின்றனா்.

ஒசூா் பகுதியில் கொத்தமல்லி, புதினா, முள்ளங்கி, கேரட், பீட்ரூட், பீன்ஸ், அவரைக்காய், கீரை உள்ளிட்ட காய்கறி வகைகள் அதிக அளவில் விளையக்கூடிய பகுதியாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் கத்தரிக்காய் சாகுபடியில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடா்ந்து சரியான மழை இல்லாததால், சொட்டுநீா்ப் பாசனம் மூலம் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனா். இந்நிலையில், காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயா்ந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ. 15 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்த நிலையில், வியாழக்கிழமை கிலோ ரூ. 40 முதல் ரூ. 50 வரை விற்பனையானது. இதுகுறித்து உழவா் சந்தையில் விவசாயிகள் கூறியதாவது:

காய்கறிகளின் விலை உயா்ந்தாலும், குறைந்தாலும் அதற்குண்டான செலவுகள் ஆகத்தான் செய்கிறது. தற்போது தண்ணீா் பற்றாக்குறை, ஆழ்துளைக் கிணறுகள் வற்றியதால், விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். கத்தரிக்காய் விளைச்சல் குறைவாக உள்ளதால், அதன் விலை உயா்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com