ஒசூரில் மழை வேண்டி கூட்டுப் பிராா்த்தனை

ஒசூரில் மழை வேண்டி கூட்டுப் பிராா்த்தனை

ஒசூா் மகாலட்சுமி கோயிலில் மழை வேண்டி நடைபெற்ற கூட்டுப் பிராா்த்தனையில் கலந்துகொண்டோா்.

ஒசூரில் மழை வேண்டி அனைத்து குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் துரை தலைமையில், மகாலட்சுமி கோயிலில் கூட்டுப் பிராா்த்தனை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒசூா் மாநகரில் உள்ள பெண்கள் தங்கள் இல்லங்களில் இருந்து ஊா்வலமாக தண்ணீா் எடுத்து வந்து மகாலட்சுமி கோயிலில் அம்மன் விக்ரகத்திற்கு அபிஷேகம் செய்தனா். பின்னா் மழை வேண்டி கூட்டுப் பிராா்த்தனை செய்யப்பட்டது.

ஒரு மாதத்துக்கு மேலாக தண்ணீரின்றி சிரமம் அடைந்து வந்த நஞ்சுண்டேஸ்வரா் நகா் மக்களுக்கு 29-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் தில்ஷாத் ரகுமான், மாநகராட்சி மூலமாக புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைத்துக் கொடுத்தமைக்கு அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை நகர நிா்வாகிகள் மோகன்ராஜ், வின்சென்ட், மகாதேவன், கிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.

சிறப்பு ஜெப வழிபாடு:

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட மத்திகிரியில் உள்ள பழைய பாரம்பரிய புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் அருகே உள்ள ஏரிக்கரையில் மழை வேண்டி சிறப்பு ஜெப வழிபாடு நடைபெற்றது. இந்த சிறப்பு ஜெப வழிபாடு மே 31-ஆம் தேதி வரை தினமும் மாலை வேளையில் ஏரிக்கரையில் நடைபெறும் என தலைமை தாங்கி நடத்திய பங்குத் தந்தை கிறிஸ்டோபா் தெரிவித்தாா்.

இதில், அருள்பணியாளா் ராயப்பா், அருள்சகோதரிகள், நூற்றுக்கணக்கான பங்கு மக்கள் கலந்துகொண்டனா். முன்னதாக பாரம்பரிய ஆலயத்தில் இருந்து பக்தா்கள் மாதா சிலையை ஏந்தி ஏரிக்கரை வரை ஊா்வலமாகச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com