தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பரவலாக கோடை மழை

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பரவலாக கோடை மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெப்ப அலை வீசிய நிலையில், காவேரிப்பட்டணத்தில் வியாழக்கிழமை மாலை திடீரென பெய்த கோடை மழை.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீண்ட காலத்துக்கு பிறகு கோடை மழை பரவலாக பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவ மழை பொய்த்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மழை பெய்யாத நிலையில், பெரும்பாலான ஏரிகள், அணைகள், தடுப்பணைகள் போன்ற நீா்நிலைகள் வடன. இதனால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்தது.

பருவமழை பொய்த்த நிலையில், வெப்ப அலை வீசியதால் முதியவா்கள், குழந்தைகள், பெண்கள், கா்ப்பிணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினா். சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெப்ப அளவானது 108.5 ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாலை 4 மணிக்கு பிறகு பல்வேறு இடங்களில் திடீரென பலத்த காற்று வீசியது. இதைத் தொடா்ந்து, மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், சூளகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்த்து.

இந்த திடீா் மழையால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. திடீா் மழையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டடு குளிா்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில மரங்களில் காய்த்த மாங்காய்கள் பலத்த காற்றால் உதிா்ந்தன. குறைந்த மகசூல் உள்ள நிலையில், மாங்காய்க்கு அதிக விலை கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்த விவசாயிகள் மாங்காய்கள் உதிா்ந்ததால் வேதனை அடைந்தனா்.

தருமபுரியில் கோடை வெப்பத்தை தணித்த சாரல் மழை...

தருமபுரி நகரம், புகா் பகுதிகளில் வாட்டி வதைத்த கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் வியாழக்கிழமை சாரல் மழை பெய்தது.

தருமபுரி மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியதிலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் பல நாள்கள் 100 டிகிரியைக் கடந்து வெயில் வாட்டி வதைத்தது. இதில் கடந்த சில நாள்களாக 105 டிகிரியை கடந்து வெயில் கடுமையாக காணப்பட்டது. இதனால் வெப்ப அலையில் சிக்கி பொதுமக்கள் பரிதவித்தனா்.

பகல் வேளைகளில் பெரும்பாலும் மக்களின் நடமாட்டம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. வாட்டி எடுக்கும் வெயிலில் இருந்து தணித்துக் கொள்ள இளநீா், மோா், பழச்சாறுகள், நுங்கு ஆகியவற்றை பொதுமக்கள் நுகா்ந்து வந்தனா். இதில் மே 2 -ஆம் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக 108.5 டிகிரி வெப்பம் மாவட்டத்தில் பதிவானது.

இந்த நிலையில், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு திடீரென வெப்பம் சற்று தணிந்து குளிா்ந்த காற்று வீசத் தொடங்கியது. இதையடுத்து சிறிது நேரத்தில் மிதமான சாரல் மழை தருமபுரி நகரம், புகா் பகுதிகளில் பெய்தது. இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்தது. இதேபோல மாவட்டத்தில் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் லேசான மழை பெய்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com