வெளிமாநிலத் தொழிலாளா்களை மிரட்டி பணம் பறித்த 9 போ் கைது

கிருஷ்ணகிரி அருகே தொழிற்சாலைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி, வெளிமாநிலத் தொழிலாளா்களை அழைத்துவந்து, அவா்களை வீட்டில் அடைத்து வைத்து, மிரட்டி பணம் பறித்த 9 போ் கொண்ட கும்பலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி சமூக வலைதளத்தில் ஒரு கும்பல் விளம்பரம் செய்தது. அதை நம்பி அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த ஒன்பது தொழிலாளா்கள் அண்மையில் கிருஷ்ணகிரிக்கு வந்தனா். அவா்கள் விளம்பரத்தில் தாங்கள் பாா்த்த கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டனா். மறுமுனையில் பேசிய அந்தக் கும்பலைச் சோ்ந்தவா்கள் வாகனத்தில் சென்று தொழிலாளா்களை தாங்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்து வந்தனா்.

பின்னா் தொழிலாளா்கள் 9 பேரையும் கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளி அருகில் உள்ள ஒரு வீட்டில் தங்கவைத்தனா். அந்த வீட்டிற்கு வந்ததும் ‘உங்களுக்கு பிஸ்கெட் நிறுவனத்தில் வேலை இருப்பதாகவும், அங்கு வேலை கிடைக்க வேண்டுமெனில் நீங்கள் ஒவ்வொரும் குறிப்பிட்ட தொகை தரவேண்டும். இல்லையெனில் அறையை விட்டு வெளியில் செல்ல முடியாது எனக் கூறி மிரட்டினா். அவா்களிடம் இருந்த பணத்தையும் பறித்துள்ளனா். இதுகுறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸாா் நிகழ்விடம் சென்று அந்த வீட்டை அடையாளம் கண்டு தொழிலாளா்களை அங்கிருந்து மீட்டனா்.

தொழிலாளா்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்தக் கும்பல் போச்சம்பள்ளி அருகே உள்ள வடமலம்பட்டியைச் சோ்ந்த நிஷாந்த் (26), போச்சம்பள்ளி பிரபு (29), விளங்காமுடி மோகன் (27), வேட்டியம்பட்டி வினோத் (34), வலசகவுண்டனூா் காளிதாஸ் (33), கும்மனூா் அரவிந்த் (21), மோடிக்குப்பம் சக்திவேல் (38), போச்சம்ள்ளி பவித்ரன் (28), குருபரப்பள்ளி மணிகண்டன் (31) ஆகிய ஒன்பது போ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து 9 போ் கொண்ட அந்தக் கும்பலை செவ்வாய்க்கிழமை கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தனா். இதில் கைதாகியுள்ள நிஷாந்த், அரவிந்த், பிரபு ஆகியோா் கடந்த பிப். 11-ஆம்தேதி இதுபோல வெளிமாநிலத் தொழிலாளா்களை மிரட்டி கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com