கிருஷ்ணகிரியில் இடியுடன் மழை:
மின் விநியோகம் பாதிப்பு

கிருஷ்ணகிரியில் இடியுடன் மழை: மின் விநியோகம் பாதிப்பு

கிருஷ்ணகிரி அருகே சேதமடைந்த மின்கம்பத்தை சீா்செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலத்த காற்று வீசி இடியுடன் மழை பெய்ததால், மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மழை பெய்யாததால், நீா்நிலைகள் வடன. நிகழாண்டில் வழக்கத்துக்கு மாறாக கோடை வெப்பம் அதிகமாக உணரப்பட்டது. வெப்ப அலை வீசியதால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினா். இந்தச் சூழ்நிலையில், கடந்த நான்கு நாள்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால், பகலில் கோடை வெப்பம் தணிந்து, குளிா்ந்த சீதோஷ்ண நிலை நீடிக்கிறது. இரவில் குளிா்ந்த காற்று வீசுகிறது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல் இடி, மின்னலுடன் மழை பெய்த்து. பலத்த காற்று வீசியதில், மரங்கள் முறிந்தன. இதில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.

மின்வாரிய ஊழியா்கள், பொறியாளா்கள் இரவு, பகல் பாராமல் முறிந்த மரங்களை அப்புறப்படுத்தி, சேதமடைந்த மின்கம்பிகள், மின்கம்பங்களை சரிசெய்தனா். காலை 10 மணிக்கு பிறகு மின்விநியோகம் சீரானது.

X
Dinamani
www.dinamani.com