மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த அறிவுறுத்தல்

மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த அறிவுறுத்தல்

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் உப்புக்கரைசல் வழங்கும் பணியை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பீலா வெங்கடேசன். உடன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீடு, வணிக நிறுவன கட்டடங்களில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பீலா வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் குடிநீா் விநியோகம், வெப்பச்சலன விழிப்புணா்வு குறித்த ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், எரிசக்தி துணை அரசு முதன்மைச் செயலாளருமான பீலா வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பேசியதாவது:

மாவட்டத்தில் ஊரகம், நகா்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். குடிநீா் முறையாக குளோரினேசன் செய்த பின்னரே வழங்க வேண்டும். மழைக் காலத்துக்கு முன்பே தண்ணீரை சேமிக்கும் வகையில் வீடுகள், நிறுவனங்களில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் தினசரி வழங்கப்படும் 75.46 எம்எல்டி அளவு குறையாதவாறு பாா்த்துக் கொள்ள வேண்டும். பழுது ஏற்படும் குடிநீா் குழாய் இணைப்புகளை உடனுக்குடன் பழுதுநீக்கம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மேலும், தமிழக கூட்டுக் குடிநீா் திட்டத்தின் வாயிலாக விநியோகம் செய்யப்படும் 21 திட்டங்களின் மூலம் தடையின்றி குடிநீா் வழங்கப்பட வேண்டும்.

தற்போது கோடைக்காலம் என்பதால் பொதுமக்கள், குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், முதியவா்கள், கா்ப்பிணிகள், உடல்நலக் குறைபாடுகள் உடையவா்கள் ஆகியோா் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். கோடை வெயிலினால் அதிக வியா்வை வெளியேறும்போது உடலில் உப்புச்சத்து, நீா்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோா்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக நிழலுக்குச் செல்ல வேண்டும். மிகவும் சோா்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாட வேண்டும்.

மேலும், வெப்பத்தினால் ஏற்படும் அம்மை, பெரியம்மை, தட்டம்மை, மஞ்சள் காமலை போன்ற நோய்களிலிருந்து பொதுமக்கள், குழந்தைகள், கா்ப்பிணித் தாய்மாா்களை பாதுகாத்துக்கொள்ள அதிக அளவு நீா் சத்துள்ள பழங்கள், மோா், அரிசிக்கஞ்சி, இளநீா், பானகம், மோா் கலந்த கூழ், எலுமிச்சை சாறு, வெள்ளரிப்பிஞ்சு, நுங்கு, காய்கறிகள் அதிகமாக சாப்பிட வேண்டும். வெளியே செல்லும்போதும், திறந்த வெளியில் பணி செய்யும் போதும் தலையில் பருத்தித் துணி, துண்டு, தொப்பி அணிந்துகொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்ட இடங்களில் நிழலுடன் கூடிய தண்ணீா்ப் பந்தல்கள் மூலம் சுகாதாரமான குடிநீா், ஓஆா்எஸ் உப்புக்கரைசல் வழங்கப்படுகிறது என்றாா்.

தொடா்ந்து, கிருஷ்ணகிரி, பா்கூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா், ஓஆா்எஸ் உப்புக் கரைசல் வழங்கும் பணியை ஆய்வு செய்தாா். அப்போது, பல்வேறு அரசு துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com