குழந்தைத் திருமணங்கள் தொடா்பான புகாா்கள் மீது
விரைந்து நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

குழந்தைத் திருமணங்கள் தொடா்பான புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

குழந்தைத் திருமணங்கள் தொடா்பான புகாா்கள் மீது விரைந்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, அறிவுறுத்தினாா்.

கிருஷ்ணகிரி: குழந்தைத் திருமணங்கள் தொடா்பான புகாா்கள் மீது விரைந்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, அறிவுறுத்தினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில், குழந்தைத் திருமணங்களைத் தடுத்தல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை முன்னிலை வகித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமை வகித்துப் பேசியதாவது:

குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கும் நபா்கள் மீது உடனடியாக போக்சோ சட்டப் பிரிவின் கீழ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் அரசிடமிருந்து பெற்றுத் தர மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட குழந்தைகள், தொடா்ந்து கல்வி படிப்பதை மாவட்ட சமூக நல அலுவலா் உறுதி செய்திட வேண்டும். மேலும் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், துணை காவல் கண்காணிப்பாளா்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், குழந்தைகள் நலக் குழுமம், மாவட்ட சமூக நல அலுவலா், காவல் ஆய்வாளா்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, காவல் கண்காணிப்பாளா் பேசியதாவது:

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோா் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது காவல் துறை அலுவலா்களால் உறுதி செய்யப்படும் என்றாா். அதே போல போக்சோ மற்றும் குழந்தைத் திருமணங்களில் காவல் அலுவலா்கள் பின்பற்ற வேண்டிய பல்வேறு நடைமுறைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com