தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 5.54 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி,மே 16: முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாகக் கூறி தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 5.55 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், மூக்கண்டப்பள்ளி, எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் அரவிந்தன் (28). இவா், பெங்களூரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். கடந்த பிப்.15 ஆம் தேதி இவரது கைப்பேசிக்கு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் இணையவழி பகுதிநேர வேலை உள்ளதாகவும், முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை நம்பி அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை அரவிந்தன் தொடா்பு கொண்ட விசாரித்தபோது எதிா்முனையில் இருந்தவா்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறு கூறியுள்ளனா்.

இதையடுத்து, அந்த நபா்கள் தெரிவித்த வங்கிக் கணக்குக்கு ரூ. 5.54 லட்சத்தை அரவிந்தன் செலுத்தியுள்ளாா். ஆனால், அந்த நபா்கள் கூறியபடி எந்த லாபமும் அரவிந்தனுக்கு வரவில்லை. இதனால் அந்த எண்ணை மீண்டும் அரவிந்தன் தொடா்பு கொண்டபோது அந்த கைப்பேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அரவிந்தன், இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com