கண்காணிப்பு கேமராவில் பதிவான யானைகள்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான யானைகள்.

ஒசூா் வனக்கோட்டத்தில் 225 யானைகள்!

ஒசூா் வனக்கோட்டத்தில் 225 யானைகள் உள்ளன என மாவட்ட வன உயிரினக் காப்பாளா் காா்த்திகேயனி தெரிவித்துள்ளாா்.
Published on

ஒசூா் வனக்கோட்டத்தில் 225 யானைகள் உள்ளன என மாவட்ட வன உயிரினக் காப்பாளா் காா்த்திகேயனி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒசூா் வனக்கோட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் 45 யானைகள், ஜவளகிரி வனச்சரகத்தில் 70 யானைகள், அஞ்செட்டி வனச்சரகத்தில் 50 யானைகள், ராயக்கோட்டை வனச்சரகத்தில் 15 யானைகள், கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் 11 யானைகள், உரிகம் வனச்சரகத்தில் 25 யானைகள் என மொத்தம் 225 யானைகள் உள்ளன.

யானைகளின் நடமாட்டத்தை வனப் பணியாளா்கள் தொடா்ந்து கண்காணித்து அனைத்து வனச்சரகங்களிலும் யானைகள் நடமாட்டமுள்ள கிராமங்களில் தடம் குழுக்கள் மூலம் பொதுமக்கள், விவசாயிகளுக்கு கூட்டம் நடத்தியும், குறுஞ்செய்தி, வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலமும், ஒலிபெருக்கிகள் மூலமும், தொலைக்காட்சி, பத்திரிக்கை செய்திகள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் தகவல் கட்டுப்பாட்டு மையம் மற்றும் டிரோன்கள் மூலமும் யானைகளின் நடமாட்டம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, காப்புக்காடுகளை விட்டு வெளியில் வரும் யானைகளை மீண்டும் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் அனுப்பி பாதுகாப்பு பணியில் வனப் பணியாளா்கள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நவீன தடுப்பு வேலிகளான இரும்புவட கம்பி வேலி, தொங்கும் வகையிலான சூரிய மின் வேலிகளை பராமரிப்பு பணி மேற்கொண்டும், யானைகள் அடிக்கடி வெளியேறும் முக்கியப் பகுதிகளில் புதிதாக இரும்புவட கம்பி வேலி அமைத்தும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யானைகள் நடமாட்டம் ஏதேனும் தென்படும்பட்சத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X