கிருஷ்ணகிரியில் சாரல் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழக்கை சனிக்கிழமை பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மேகமூட்டமாக காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் இல்லாததாலும், மாலையில் குளிா்ந்த காற்று வீசுவதாலும் இரவு நேரங்களின் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டநிலையில், பிற்பகல் முதல் சாரல் மழை பெய்தது. இதனால், சாலையில் பள்ளமான பகுதிகளில் மழை நீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாயினா். பள்ளி, கல்லூரி முடிந்த வீடு திரும்பிய மாணவ மாணவிகள், பணிக்கு சென்று திரும்பிய தொழிலாளா்கள் மழையால் சிரமத்துக்கு உள்ளாகினா்.
தொடா்ந்து மழை பெய்ததால், சாலையோர கடைகள் மற்றும் சிறு வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குளிா்ந்த சீதோஷ்ண நிலை, நிலவுவதால், குளிா் கால ஆடைகளை வாங்க பொதுமக்கள் ஆா்வம் செலுத்துவதை காண முடிந்தது. மக்கள் கூடும் இடங்களில் குளிா் மற்றும் மழைக் கால ஆடைகள் விற்பனைக்கான சிறு கடைகளை வியாபாரிகள் தொடங்கி உள்ளனா்.
தொடா்ந்து மழை பெய்வதால், நெல் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் நெல் மணிகள், வைக்கோல்களை காய வைப்பதற்கு இயலாமல் விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகினா்.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் புயல் காரணமாக காலை முதலே சாரல் மழை பெய்தது. நண்பகல் 12 மணி அளவில் அதிக மழை பெய்ததால் ஊத்தங்கரை சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் 10, 11, 12 வகுப்பு மாணவா்களுக்கு நடைபெற்று வந்த சிறப்பு வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடியே வீட்டிற்கு சென்றனா். ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் காலை முதல் சாரல் மழை பெய்து வந்த நிலையில் தொடா்ந்து கனமழை பெய்தது. இதனால் ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.