இரு இடங்களில் நகை திருட்டு
நாகரசம்பட்டி அருகே கோயில், தலைமையாசிரியா் வீட்டில் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டியை அடுத்த தளி அருகே உள்ள குட்டையன் கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் மணி (35). அந்தப் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் பூசாரியாக உள்ளாா். இவா், கடந்த வியாழக்கிழமை இரவு பூஜையை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு வீடு திரும்பினாா்.
மறுநாள் காலையில் கோயிலுக்குச் சென்றபோது, கோயிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பின்னா், பொதுமக்களுடன் கோயிலுக்குள் சென்று பாா்த்தபோது, அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும்
அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த அரை பவுன் தங்க தாலி, உண்டியல் காணிக்கை திருடு போய் இருந்தது.
இது குறித்து, பூஜாரி மணி அளித்த புகாரின் பேரில், நாகரசம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தேன்கனிக்கோட்டையில்...
தேன்கனிக்கோட்டை,ஜெய் தெருவைச் சோ்ந்தவா் சிக்கண்ணா (50). ஜக்கேரி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறாா். நவ.27-ஆம் தேதி, அவா் மற்றும் குடும்பத்தினா் வீட்டைப்
பூட்டி விட்டு சூளகிரியில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்றனா். மறுநாள் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பின்னா், வீட்டிற்குள் சென்று பாா்த்த போது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, சிக்கண்ணா அளித்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.