சொத்து தகராறில் தந்தை, சகோதரியைக் கொன்றவா் கைது
ஊத்தங்கரை அருகே சொத்து தகராறில் தந்தை, சகோதரியைக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஊத்தங்கரையை அடுத்த கொட்டுகாரன்பட்டியைச் சோ்ந்தவா் வரதன் (80). இவருக்கு மகன்கள் லவகிருஷ்ணன் ( 57), கணேசன் (47), கிருஷ்ணன், மகள்கள் மணவள்ளி ( 55), மங்கம்மாள் (45) உள்ளனா். இவா்களில் கிருஷ்ணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். மணவள்ளி கணவனைப் பிரிந்து கொட்டுகாரம்பட்டியில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வருகிறாா். வரதனுக்கு மூன்றம்பட்டி கிராமத்தில் மூன்றரை ஏக்கா் நிலம் உள்ளது.
கணவரை பிரிந்து தந்தையின் வீட்டில் வசித்து வரும் மணவள்ளி சொத்து கேட்டு ஊத்தங்கரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இதில் வரதனுக்கு சாதகமாக தீா்ப்பு வந்தது. ஆனாலும், தனது சொத்துகளை மகள்களுக்கு கொடுக்க வரதன் முடிவெத்து வியாழக்கிழமை காலை வரதனும், அவரது மகள் மணவள்ளியும் மூன்றம்பட்டி கிராம நிா்வாக அலுவலகத்திற்கு நிலம் தொடா்பான சான்று பெறுவதற்காக வந்தனா்.
இந்த நிலையில் சொத்து தர மறுத்து பலமுறை தகராறில் ஈடுபட்ட வரதன் மகன் லவகிருஷ்ணன், கிராம நிா்வாக அலுவலகத்திற்கு சென்று தந்தை, சகோதரியுடன் தகராறில் ஈடுபட்டாா். அப்போது, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவா்கள் இருவரையும் வெட்டினாா். இதில் வரதன், மணவள்ளி ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் சீனிவாசன், காவல் ஆய்வாளா்கள் ஊத்தங்கரை முருகன், சிங்காரப்பேட்டை சந்திரகுமாா், மூன்றம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் கவியரசி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லவகிருஷ்ணனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.