குறைந்த மின்அழுத்த பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணப்படும் குறைந்த மின் அழுத்த பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
கிருஷ்ணகிரி அருகே கும்மனூா் - கூலியம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய நடை மேம்பாலம் அமைக்க வேண்டும். கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டாவில் திருத்தம் செய்ய காலதாமதம் ஏற்படுகிறது. பால் கொள்முதல் செய்வதில் தனியாா் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் கேரள மாநிலத்தில் பாம்பு தீண்டி உயிரிழக்கும் விவசாயியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதைப் போல, தமிழகத்திலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராயக்கோட்டை அருகே உடையாண்டஅள்ளி பகுதியில் காணப்படும் குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும். அஞ்செட்டி அருகே பனை ஏரியைத் தூா்வார வேண்டும். மாட்டுக் கொட்டகை அமைக்க மானியம் வழங்க வேண்டும். இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு மதிப்புக் கூட்டு பொருள்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். ஈச்சம்பாடி அணைக் கால்வாயைத் தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீா்க்க வலியுறுத்தி விவசாயிகள் பேசினா்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு பேசியதாவது:
ஆவின் நிறுவனத்தில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கலாம். வனவிலங்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. பாம்பு தீண்டினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது, மாட்டுக் கொட்டகை அமைக்க மானியம் வழங்குவது 2022-23-ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் மானியம் வழங்குவது குறித்தும் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும். குறைந்த மின்அழுத்த பிரச்னைக்கு உரிய தீா்வு காணப்படும். மதிப்புக் கூட்டு பொருள்கள் உற்பத்தி குறித்து, விவசாயிகள் குழுவாக இணைந்து பயிற்சி அளிக்க கோரிக்கை விடுத்தால் உரிய பயிற்சிகள் அளிக்கப்படும் என்றாா்.