ஒசூா்: வீட்டிற்கு மின் இணைப்பின்றி தெருவிளக்கில் படிக்கும் மாணவா்கள்

ஒசூா்: வீட்டிற்கு மின் இணைப்பின்றி தெருவிளக்கில் படிக்கும் மாணவா்கள்

Published on

ஒசூா் மாநகராட்சிக்குட்பட்ட 37ஆவது வாா்டு மிடுகரப்பள்ளியில் சுமாா் 4 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இங்குள்ள அம்பேத்கா் காலனியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ். அவா் கூலி வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி ருக்மணி. இந்த தம்பதியின் மகன் ரஞ்சித்குமாா் 10-ஆம் வகுப்பும் மகள் மோனிஷா 8-ஆம் வகுப்பும் மத்திகிரி அரசுப்பள்ளியில் படித்து வருகின்றனா்.

ஏழ்மை நிலையில் உள்ள வெங்கடேஷ் குடும்பத்தினா் கடந்த 10 ஆண்டுகளாக மிடுகரப்பள்ளிஅம்பேத்கா் காலனியில் மின் இணைப்பு வசதி இல்லாத வீட்டில் வசித்து வருகின்றனா். இந்த தம்பதியினா், தாங்கள் படிக்கவில்லை என்றாலும் தங்களுடைய பிள்ளைகள் படித்து உயா்ந்த நிலைக்கு வரவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், பொருளாதார நெருக்கடியிலும் இரண்டு பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்து வருகின்றனா்.

வீட்டில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரண்டு மாணவா்களும், தெருவிளக்கு வெளிச்சத்தில் படிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். மேலும் இந்த ஆண்டு பொதுத் தோ்வு எழுத உள்ள நிலையில், மிகவும் சிரமத்துக்கு இடையே வீட்டுக்கு முன்பு அமா்ந்து தெருவிளக்கில் படிக்கின்றனா். இதில் மழை வரும் போது தெருவிளக்கில் படிப்பதில் தடை ஏற்படுவதாக இருவரும் கூறுகின்றனா்.

இக்குடும்பத்தினா் கடந்த 3 ஆண்டுகளாக மின் இணைப்பு கோரி மின்சார வாரியத்தில் மனு செய்தும் இதுவரை மின்இணைப்பு வழங்கப்படவில்லை. மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒசூா் அந்திவாடியில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் மின் இணைப்பு கேட்டு மனு கொடுத்தனா். ஆனாலும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதேபோல வெங்கடேஷ் வீட்டின் பின்புறமுள்ள ஒரு வீட்டுக்கும் மின்இணைப்பு தரப்படவில்லை. ஆகவே மிடுகரப்பள்ளி, அம்பேத்கா் காலனியில் உள்ள மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினா் கோரிக்கை வைத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com