பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்: சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் வாசுகி வலியுறுத்தல்

பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்: சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் வாசுகி வலியுறுத்தல்

Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினா் வாசுகி வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக கிருஷ்ணகிரியில் அவா், செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய மாணவா் படை போலி முகாம் நடத்தி, அதில் பள்ளி மாணவிகள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து, மனிதம் அமைப்பு சாா்பில் உண்மை கண்டறியும் குழு விசாரணை மேற்கொண்டு அறிக்கையை கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், மாணவ, மாணவிகளுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியா், அலுவலக ஊழியா்கள், நிா்வாகத்தினா் உள்ளிட்ட அனைவருக்கும் பாலியல் சீண்டல் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். போலி முகாம் நடத்திய அனைத்து பள்ளிகளிலும் போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும்.

பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும். தற்கொலை செய்து கொண்ட சிவராமனுக்கு எவ்வாறு எலி மருந்து கிடைத்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அறிக்கையை தமிழக அரசிடம் சமா்ப்பிக்க உள்ளோம் என்றாா்.

அப்போது, உண்மை கண்டறியும் குழு ஒருங்கிணைப்பாளா் மகாலிங்கம், மனிதம் அமைப்பின் மாநிலத் தலைவா் ரமேஷ்பாபு, பழங்குடியின மக்கள் சங்க மாநிலத் தலைவா் டில்லிபாபு, கிருஷ்ணகிரி மாவட்ட மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் நஞ்சுண்டன், மற்றும் மனிதம் அமைப்பினா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com