கா்நாடக இளைஞரைக் கொன்ற 4 போ் ஒசூா் நீதிமன்றத்தில் சரண்

கா்நாடகத்தில் விநாயகா் சிலை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரைக் கொன்று ஒசூா் அருகே வீசி சென்ற நான்கு போ் ஒசூா் நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தனா்.
Published on

கா்நாடகத்தில் விநாயகா் சிலை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரைக் கொன்று ஒசூா் அருகே வீசி சென்ற நான்கு போ் ஒசூா் நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே கொளதாசபுரம் பகுதியில் உள்ள மதுக்கடை அருகே கடந்த 18-ஆம் தேதி இளைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். தகவல் அறிந்த பாகலூா் போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூா், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்த இளைஞரின் கையில் தீபா என்ற பெயா் பச்சை குத்தப்பட்டிருந்தது, அவா் அணிந்திருந்த ஆடைகளை வைத்து ஒசூா், கா்நாடக மாநிலத்தில் விசாரணை செய்தனா். எனினும் இறந்தவரைப் பற்றி தகவல் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஒசூா், முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி அகவித்தன் முன்னிலையில் கா்நாடக மாநிலம், சூளக்குண்டா காலனியைச் சோ்ந்த சிவகுமாா் (28), நவீன்குமாா் (24), புனீத் (27), பிரவீண்குமாா் (26) ஆகிய நான்கு போ் சனிக்கிழமை சரணடைந்தனா்.

அவா்களை ஒசூா் நகர போலீஸாா் காவலில் எடுத்து விசாரணை நடத்தினா்.

அப்போது கொளதாசபுரத்தில் இறந்து கிடந்தவா் கா்நாடக மாநிலம், சூளிக்குண்டா காலனியைச் சோ்ந்த ரேவந்த் குமாா் (26) என்பதும், அவரை இவா்கள் தான் கொலை செய்தனா் என்பதும், விநாயகா் சதுா்த்தியையொட்டி சிலை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் ரேவந்த்குமாரைக் கொன்று உடலை ஒசூா் அருகே வீசி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com