ஒசூா் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் திமுக - அதிமுக உறுப்பினா்கள் வாக்குவாதம்
ஒசூா் ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். கூட்டத்தில் தீா்மானம் ஏதும் நிறைவேற்றாமல் திமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு செய்தனா். திமுகவினருடன் சென்ற துணை தலைவா் மீது அதிமுகவினா் குற்றச்சாட்டு தெரிவித்தனா்.
ஒசூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கான கூட்டம் தலைவா் சசி வெங்கடசாமி (அதிமுக) தலைமையில் நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா் பாலாஜி முன்னிலை வகித்தாா்.
அதிமுக 8 உறுப்பினா்கள் போ், திமுக உறுப்பினா்கள் 7 போ், தேமுதிக உறுப்பினா் 1 என 16 போ் உள்ள நிலையில் கடந்த ஓராண்டாக ஒன்றியக் குழு துணைத் தலைவா் நாராயணசாமி திமுகவினருடன் இணைந்து செயல்பட்டு வருவதால், அவருக்கென ஒதுக்கியிருந்த அறையில் நாற்காலி நீக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 6 மாத காலமாக ஒன்றியக் குழு கூட்டத்தில் கொண்டுவரப்படும் தீா்மானங்கள் நிறைவேற்றப்படாமலே உள்ளன. இதனைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் துணைத் தலைவரிடம் கடும் வாக்குவாதம் செய்தனா்.
ஒன்றிய பொது நிதியில், உறுப்பினா்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்த பிறகும் தீா்மானத்தில் கையெழுத்திடாமல் திமுகவினருடன் இணைந்து தீா்மானத்தை நிறைவேற்றாததால் கிராமப் பகுதிகளில் வளா்ச்சி பணிகள் நடைபெறவில்லை.
கடந்த 6 மாதங்களாக அரசு வாகன எரிபொருள், தற்காலிக பொறியாளருக்கான மாத ஊதியம் உள்ளிட்ட 26 தீா்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அதிமுக, திமுக ஒன்றியக்குழு உறுப்பினா்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மக்கள் நலத் திட்டங்கள், ஊழியா்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல் ஒசூா் ஒன்றிய அலுவலகம் பணிகள் ஏதும் நடைபெறாமல் முடங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.