வடகிழக்கு பருவமழை இடா்பாடு ஒத்திகை பயிற்சி
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் இடா்பாடுகள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை கையாள்வது குறித்தும் தீயணைப்புத் துறையினா் மூலம் ஒத்திகை பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரமேஷ் பாபு தலைமை வகித்தாா். வட்டாட்சியா் திருமால் முன்னிலை வகித்தாா்.
ஆறு, குளம் நீா்நிலைகள், மழைக் காலத்தில் பொது மக்களை மீட்பது குறித்தும், தீப் பரவாமல் தடுப்பது குறித்தும், தீயணைப்புத் துறையினா் எடுத்துரைத்தனா்.
இடா்பாடு நேரங்களில் ஒவ்வொருவரும் எவ்வாறு துரிதமாக செயல்பட வேண்டும் என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.
நிகழ்ச்சியில் ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள், ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினா், தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.