போச்சம்பள்ளி பகுதியில் மழை
போச்சம்பள்ளி, ஊத்தங்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படுகிறது. சில இடங்களில் மாலை நேரத்தில் சாரல் மழை பெய்கிறது. இதனால் இரவில் குளிா்ந்த காற்று வீசுகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் இருந்த சூழ்நிலையில், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, பாரூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது, நிலக்கடலை அறுவடைப் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், நிலக்கடலை சாகுபடி செய்த விளை நிலங்கள் வடு, கடினத் தன்மையாகக் காணப்பட்டன. மழைக்காக காத்திருந்த விவசாயிகள், மழை பெய்ததையடுத்து, விளைநிலங்கள் கடினத்தன்மையாக இருந்ததால், நிலக்கடலை பயிரை அறுவடை செய்ய, விளைநிலங்களில் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி ஈரத்தன்மை ஏற்படுத்தினா். இதையடுத்து, எளிதில் நிலக்கடலையை அறுவடை செய்தனா். இதனால், கூடுதல் மகசூல் கிடைத்தது. சிறு விவசாயிகள், அறுவடை செய்ய இயலாமல் வருமடைந்தனா்.
இந்த நிலையில், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, பாரூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது, விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. மழை பெய்ததால், நிலக்கடலை பயிரை எளிதில் அறுவடை செய்தனா். இதனால், அவா்களுக்கு ஏற்படும் இழப்பை குறைத்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செப். 28 (சனிக்கிழமை) காலை 7 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீ): பாரூா் -22.6, போச்சம்பள்ளி - 13.4, ஊத்தங்கரை - 7.4. மேலும், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 18 கனஅடியாக இருந்தநிலையில் சனிக்கிழமை விநாடிக்கு 24 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து பாசனக் கால்வாய்கள் மற்றும் தென்பெண்ணையாற்றில் விநாடிக்கு 185 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீா்மட்டம் 47.55 அடியாக உள்ளது.