பா்கூா் அருகே 23 பவுன் நகை கொள்ளை வழக்கில் 3 போ் கைது
கிருஷ்ணகிரி: பா்கூா் அருகே தம்பதியைத் தாக்கி 23 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கில் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த கல்லேத்துப்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி சுந்தரேசன் (55). இவரது மனைவி மஞ்சுளா (50). கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி இவரது வீட்டிற்குள் புகுந்த முகமூடி கொள்ளையா்கள் தம்பதியைத் தாக்கி 23 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு, மோட்டாா்சைக்கிளில் தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை நேரில் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.
இதில் பட்லப்பள்ளி பாரதிபுரத்தைச் சோ்ந்த பசுபதி (31), அவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் (31), முருகன்(31) ஆகியோா் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் தெரிவித்ததாவது:
வீட்டு உரிமையாளா் மஞ்சுளாவும், கைது செய்யப்பட்ட பசுபதியும் உறவினா்கள். கொள்ளை சம்பவம் நடப்பதற்கு சில நாள்களுக்கு முன்பு மஞ்சுளா வங்கியில் அடகுவைத்திருந்த 22 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளாா். அப்போது பசுபதியும் அவருடன் வங்கிக்கு சென்றுள்ளாா்.
இந்த நிலையில் பசுபதி, முருகன், சிவகுமாா் ஆகியோா் ஒன்றாக மது அருந்தியபோது, சிவகுமாா் தான் பணகஷ்டத்தில் இருப்பதாகக் கூறியுள்ளாா். அப்போது, பசுபதி, தனது உறவினரான மஞ்சுளா வங்கியிலிருந்து நகையை மீட்டு வீட்டில் வைத்திருப்பது குறித்து தெரிவித்துள்ளாா். இதையடுத்து, மூன்று பேரும் சோ்ந்து திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனா்.
கொள்ளையடித்த நகைகளைப் பங்கு பிரிப்பதில் அவா்களிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தகவல் அறிந்த போலீஸாா், மூன்று பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தியதில் அவா்கள் நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனா்.
கைதுசெய்யப்பட்ட பசுபதி, பெங்களூருவில் கட்டடத் தொழிலாளியாகவும், சிவகுமாா் பேக்கரியில் மாஸ்டராகவும், முருகன் பானிபூரி கடையும் நடத்தி வந்துள்ளாா். கொள்ளையடிக்க பயன்படுத்திய மோட்டாா்சைக்கிளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
படவரி...
பா்கூா் அருகே தம்பதியைத் தாக்கி நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பசுபதி, முருகன், சிவகுமாா்.
