கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 176 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Published on

கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக அண்டை மாநிலங்களுக்குக் கடத்த முயன்ற 176 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் 115 வாகனங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று உணவுப் பொருள் கடத்தல் தடுப்புத் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் அமைந்துள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், திருவண்ணாமலை, வேலூா் ஆகிய மாவட்டங்களில் இருந்து கா்நாடகம், ஆந்திர மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுகின்றன. குடும்ப அட்டைதாரா்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி வெளிமாநிலங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிருஷ்ணகிரி வழியாக ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க துணை காவல் கண்காணிப்பாளா் வடிவேல், மாவட்ட வழங்கல் அலுவலா் கீதாராணி, பறக்கும் படை தனி வட்டாட்சியா் விஜயகுமாா், காவல் ஆய்வாளா் ராஜேந்திரன், போலீஸாா் ஒருங்கிணைந்து கடந்த 2024 ஆண்டில் ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ச்சியாக நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு 245 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டது.

அதிக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட வகையில் மாநில அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதுபோல ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய 115 வாகனங்களுடன் 176 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக அளவில் மூன்றாமிடத்தில் உள்ளது.

தொடா்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 8 போ் மீது கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருள்கள் கடத்தப்படுவது குறைந்துள்ளது. இதற்காக சிறப்பாக பணிபுரிந்த கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புத் துறையினருக்கு பாராட்டு சான்றிதழை குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு காவல் துறை இயக்குநா் சீமா வழங்கி பாராட்டியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com