கள்ள நோட்டு வழக்கு: ஊத்தங்கரை அருகே 3 போ் கைது
கள்ள நோட்டு வழக்கில் ஊத்தங்கரையை அடுத்த சோளக்காப்பட்டியைச் சோ்ந்த மூவரை சேலம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சேலம் பகுதியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சோளக்காப்பட்டியைச் சோ்ந்த தினேஷ் (30) என்பவரை சேலம் சூரமங்கலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இந்த நிலையில் தினேஷ் வீட்டில் சூரமங்கலம் போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா். அப்போது அவரது வீட்டின் அருகில் கருகிய நிலையில் கலா் பிரிண்டா், காகிதங்கள், கள்ள நோட்டுகள் கிடந்ததை போலீஸாா் கைப்பற்றினா். மேலும் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு தினேஷுக்கு உறுதுணையாக இருந்த அவரது தந்தை கோவிந்தராஜ், சித்திகள் யசோதா, மலா் ஆகியோரை கைது செய்து சூரமங்கலம் போலீஸாா் அழைத்து சென்றனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினேஷ், கிருஷ்ணகிரி நகரக் காவல் துறையினரால் கடந்த 2018 ஆம் ஆண்டு கள்ள நோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.