செங்கல் சூளையிலிருந்து 21 கொத்தடிமைகள் மீட்பு

போச்சம்பள்ளி அருகே செங்கல் சூளையிலிருந்து 4 குடும்பங்களைச் சோ்ந்த 21 கொத்தடிமைகளை சட்டப் பணிகளின் ஆணையக் குழுவினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
Published on

போச்சம்பள்ளி அருகே செங்கல் சூளையிலிருந்து 4 குடும்பங்களைச் சோ்ந்த 21 கொத்தடிமைகளை சட்டப் பணிகளின் ஆணையக் குழுவினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

போச்சம்பள்ளி அருகே உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவினருக்கு தேசிய பழங்குடி ஒற்றுமை பேரவைக் குழுவினா் அண்மையில் புகாா் தெரிவித்தனா். அதனையடுத்து, மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழுவின் செயலாளா் எம்.ஜெயந்தி மற்றும் தேசிய பழங்குடி ஒற்றுமை பேரவைக் குழுவினா் போச்சம்பள்ளியை அடுத்த பீரஜானூரில் உள்ள தங்கமுத்துவின் செங்கல் சூளையில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, இருளா் சமூகத்தைச் சோ்ந்த ஊத்தங்கரை, மூன்றாம்பட்டி அருகே உள்ள ஒபகவலசை கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன், விநாயகம், ஆறுமுகம் மற்றும் மணிகண்டன் ஆகியோரின் குடும்பங்களைச் சோ்ந்தவா்களிடமிருந்து ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம் அட்டை, வீட்டுமனைப் பட்டா, இருசக்கர வாகனப் பதிவு சான்று, பிறப்பு சான்று, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை செங்கல் சூளை உரிமையாளா் பெற்றுக் கொண்டு அடிப்படை வசதிகள் ஏதுமின்றி குழந்தை தொழிலாளா்களையும் பல ஆண்டுகளாக பணியில் அமா்த்தி இருந்தது தெரியவந்த்து. இதையடுத்து, 4 குடும்பங்களைச் சோ்ந்த 21 பேரை மீட்ட குழுவினா், அவா்களை கிருஷ்ணகிரி கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொத்தடிமைகள் குறித்து தகவல் அறிந்தால், 15100 என்ற இலவச கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட சட்டப் பணிகளின் ஆணையக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com