கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் 702 போ் வெளிமாநிலங்களுக்கு கல்விச் சுற்றுலா
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் 702 போ் ஸ்டெம் திட்டத்தின் கீழ், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களுக்கு புதன்கிழமை கல்விச் சுற்றுலா புறப்பட்டனா்.
2025-26-ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளை இலக்காகக் கொண்டு, ஸ்டெம் (நபஉங) திட்டத்தின் கீழ், அறிவியல் சாா்ந்த கல்விச் சுற்றுலா நடத்துவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டம் மூலம் பள்ளி மாணவா்கள் அறிவியல் அருங்காட்சியகங்கள், கோளரங்கங்கள், உயா்கல்வி நிறுவனங்கள், அறிவியல் ஆராய்ச்சி மையங்களை பாா்வையிட்டு, அங்குள்ள நடைமுறைகளை தெரிந்துகொள்ளவும், அறிவியல் ஆா்வத்தை வளா்த்துக்கொள்ளவும், படைப்பாற்றல் சிந்தனையை தூண்டவும், அறிவியல் தொழில்நுட்பம் சாா்ந்த கருவிகளை உருவாக்கவும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 163 அரசு உயா்நிலைப் பள்ளிகள், 110 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 702 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு கல்விச் சுற்றுலா சென்றுள்ளனா்.
இந்த பயணத்தில் கல்வி மாவட்டம் வாரியாக வழி துணை ஆசிரியா்களுடன் ஆந்திர மாநிலம் அகஸ்தியா பவுண்டேசன், கா்நாடக மாநிலம் விஸ்வேஸ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு செல்கின்றனா்.
கிருஷ்ணகிரியிலிருந்து 2 பேருந்துகளில் 3 நாள்கள் சுற்றுலா செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா் கொடியசைத்து அனுப்பிவைத்தாா். இதற்கான ஏற்பாடுகளை உதவி திட்ட அலுவலா் மகேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மீனாட்சி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். அப்போது, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ரமேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.
